Wednesday, 14 September 2011

அரபு எமிரேட்ஸில் ‘மெகா’ விசா மோசடி

• சில நிறுவனங்கள் 30 லேபர் கார்ட் மாத்திரம் கையிலிருக்க, 130 பேருக்கு ரெசிடென்ஸ் விசாவுக்காக விண்ணப்பித்து உள்ளன!

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஆயிரக்கணக்கில் நடைபெற்றுள்ள விசா மோசடி, உட்துறை அமைச்சினால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக, தொழிலாளர் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் அமைச்சின் செயலாளர் ஹமீட் பின் டீமாஸ், கடந்த இரு வாரங்களில் இப்படியான மூன்று மோசடி முயற்சிகள் அகப்பட்டதையடுத்தே, இந்த விஷயத்தில் அமைச்சு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஐக்கிய அரபுக் குடியரசில் தங்கியிருந்து பணி புரியும் வெளிநாட்டவர்களுக்கு ரெசிடென்ஸ் விசா வழங்கப்படுகின்றது. இதைப் பெறுவதற்கு, குறிப்பிட்ட நபர் ஒரு நிறுவனத்தில்பணி புரிவதற்கான லேபர் கார்ட் வைத்திருக்க வேண்டும். இப்படியான பணியாளர்களின் சார்பில், குறித்த நிறுவனமே ரெசிடென்ஸ் விசாவுக்காக விண்ணப்பிக்க முடியும்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விசா மோசடி, தனிப்பட்ட நபர்களால் செய்யப்பட்டதல்ல; நிறுவனங்களால் செய்யப்பட்ட மோசடி என்றே தெரியவருகின்றது. சில நிறுவனங்கள் தம்மிடையே 30 லேபர் கார்ட் உள்ள பணியாளர்கள் இருக்கும் நிலையில், 130 பேருக்கு ரெசிடென்ஸ் விசாவுக்காக விண்ணப்பித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இதுவரை நடைபெற்றுள்ள விசா குற்றங்களில், இதுதான் மிகப்பெரிய மோசடி என்று தொழிலாளர் அமைச்சு அதிகாரி கூறியிருக்கிறார்.

மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள், இனி ஆன்லைனில் விசா விண்ணப்பங்கள் அனுப்புவதைத் தடைசெய்யவுள்ளதாக, உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

http://eravursyf.blogspot.com/

No comments: