காபுல், ஆப்கானிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் ஒன்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார், ஆப்கானிஸ்தானின் நட்சத்திர உளவு அதிகாரி. இவர் பயணித்த வாகனத் தொடரை மோதுவதற்கு வந்த காரின் சாரதியை, மெய்ப் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர்!
தாக்குதலில் சிக்காமல் உயிர் தப்பியவர் ஆப்கானிஸ்தானின் தேசிய உளவுத்துறையின் (NDS) பிரதித் தலைவர் அஹ்மட் ஜியா. ஆப்கான் உளவுத்துறையின் மிகத் திறமைசாலியான உளவு அதிகாரியாக இவர் கணிக்கப்பட்டிருக்கின்றார். இதனால், ஆப்கானில் தலிபான்களின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கின்றார்.
இதற்கு முன்னரும் அஹ்மட் ஜியாவைக் கொல்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த முயற்சிகளும் தலிபான்களுக்குப் பலனளிக்கவில்லை.
இன்று (புதன்கிழமை) காலை அலுவலகம் செல்வதற்காக இவர் வாகனத் தொடரணி ஒன்றுடன் கிளம்பியிருந்தார். இவர் சென்ற காருக்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, பக்கவாட்டிலுள்ள வீதி ஒன்றிலிருந்து வெளிப்பட்ட கார் ஒன்று, இவர் சென்றுகொண்டிருந்த காரை வேகமாக அணுக முயன்றது.
ஜியாவின் வாகனத்துக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த அவரது மெய்ப்பாதுகாவலர், அந்தக் காரை நிறுத்துமாறு சைகை செய்தபோதும், கார் மேலும் வேகமெடுத்தது. இதையடுத்து ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்தபடியே துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் மெய்ப்பாதுகாவலர்.
வேகமாகக் காரைச் செலுத்திவந்த நபர் அந்த இடத்திலேயே கொல்லப்பட, அவர் வந்த கார் வெடித்துச் சிதறியது.
சிதறிய காரைச் சோதனையிட்டபோது, காரில் பெருமளவு ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கொல்லப்பட்ட நபர் தற்கொலைத் தாக்குதல் நடாத்தி, ஜியாவைக் கொல்ல முயற்சி செய்தார் என ஆப்கான் உளவுத்துறை அறிவித்துள்ளது.
ஆப்கான் உளவுத்துறை, நேற்றைய தினம்தான் தலிபான் தலைவரைப் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தது. “தலிபான் தலைவர் முல்லா ஓமர், அவரது மறைவிடத்திலிருந்து மாயமாக மறைந்து விட்டார். அவரது தளபதிகளாலேயே அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், அவரது உடல் கிடைக்கும்வரை இறந்ததாக உறுதிப்படுத்த முடியாது” என்று உளவுத்துறை, ஊடகவியலாளர்களிடம் அச் சந்திப்பில் கூறியிருந்தது.
இந்த விபரம் கூறப்பட்டு 24 மணிநேரத்துக்குள், உளவுத்துறையின் நட்சத்திர உளவு அதிகாரி குறிவைக்கப்பட்டிருக்கிறார்!
No comments:
Post a Comment