Wednesday, 14 September 2011

ஆப்கான் மாணவிகள் ஏன் நம்மைப் போல் இல்லை?


http://eravursyf.blogspot.com/

காபுல், ஆப்கானிஸ்தான்: இங்குள்ள ஸ்கூல்களில், கோடைகால மினி விடுமுறை ஜூலை மாதத் தொடக்கத்தில் விடப்படும். 12 வயதான நூரியா என்ற மாணவிக்கும் விடுமுறை. அவருக்கு விடுமுறை விட்டிருக்கின்றது என்ற சந்தோஷத்தைவிட, அதிக சந்தோஷமான விஷயம் வேறொன்று உண்டு.

அது, என்ன தெரியுமா? விடுமுறை முடிந்து திரும்பும்போது, அந்தப் பெண் செல்வதற்கு ஸ்கூல் கட்டடம் ஒன்று இருக்கப் போகின்றது.

மேலே கூறப்பட்டது உங்களுக்கு ஒரு ஆச்சரியமான கூற்றாக இருக்கலாம். ஆனால் ஆப்கானிஸ்தானில் அப்படியல்ல.

பெண்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் திடீர் திடீரென்று தாக்கப்படுகின்றன. கட்டடங்கள் உடைத்து நொருக்கப் படுகின்றன. பாடசாலைக்கு வரக்கூடாது என்று மாணவிகளும் ஆசிரியைகளும் மிரட்டப்படுகின்றனர்.

நூரியாவின் பாடசாலையையும் சில மாதங்களுக்கு முன்னர் தாக்க முயற்சித்தார்கள். தாக்க முயன்றது யார்? தலிபான்களில் ஒரு பிரிவினர்!

கடந்த பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு வேளையில், 10 வகுப்பறைகளையுடைய பெண்கள் பாடசாலைக்குள் முகமூடியணிந்த தலிபான் பிரிவினர் புகுந்தார்கள். பாடசாலை மன்ட்ரவரி என்ற கிராமத்தில் (காபுல் நகரிலிருந்து 100 மைல்கள்) அமைந்திருந்தது.

தலிபான்களால் தாக்கப்பட்ட ஒரு ஸ்கூல். இடிந்த கட்டடத்தில் படிக்க, வாயிலில் வரிசையாக மாணவிகளைப் பாருங்கள்!

இரவுநேர வாட்ச்மேனை கட்டிப்போட்டுவிட்டு, பாடசாலை அதிபரின் அறை, லைப்பிரரி ஆகிய இரண்டிலும் மண்ணெண்ணை ஊற்றினார்கள். பற்றவைத்தார்கள். போய்விட்டார்கள். இது ஒரு எச்சரிக்கைத் தாக்குதலாம்!

மறுநாள் வந்து பார்த்த ஊர் மக்களுக்கு, பாடசாலைச் சுவரில் எழுதப்பட்டிருந்தது, எச்சரிக்கை!

எச்சரிக்கை என்ன? “இந்தப் பாடசாலைக்கு இனிமேல் யாரும் வரக்கூடாது. படிப்பதற்கு மாணவிகளோ, அவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியைகளோ வந்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படும்”

தண்டனை என்ன என்று எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால், இந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது அப்பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அந்தத் தண்டனை, மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் கசையடி வழங்கப்படும். தண்டனையை எதிர்ப்பவர்களுக்கு, மூக்கும் காதுகளும் வெட்டப்படும்.

தண்டனை அது. குற்றம் என்ன? பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து பாடசாலை செல்வதுதான் குற்றம்.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட மறுநாள், மன்ட்ரவரி கிராமத்தில் ஒரு ஆச்சரியம் நடைபெற்றது. அந்தப் பெண்கள் பாடசாலையில் பயின்று வந்த 650 மாணவிகளில், பெரும்பாலானவர்கள் வழக்கம்போல படிக்க வந்தார்கள்.

சுவரில் எழுதப்பட்டிருந்த எச்சரிக்கை வேலை செய்யவில்லை!

கட்டடங்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த காரணத்தால், அவர்களுக்கான வகுப்புக்கள் மரங்களின் அடியில் நடைபெற்றன. கட்டடங்களை திருத்தி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர, சில வாரங்கள் எடுத்தன. அதுவரை பிப்ரவரி மாதக் குளிரிலும் மாணவிகள் மரத்தடியில் இருந்து படித்தார்கள்.

அருகிலுள்ள ஊர்களில் இருந்த பாடசாலை லைப்பிரரிகளில் இருந்து நூல்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன. முழுமையாக எல்லா நூல்களும் எரிந்துபோன லைப்பிரரியை முழுமையாக மாற்றீடு செய்ய முடியவில்லை. ஆனால், ஓரளவுக்கு மாற்றீடு செய்ய முடிந்தது.

வகுப்பறையில் இருந்த மேஜைகள் தலிபான்களின் தாக்குதலில் உடைக்கப்பட்டு விட்டன!

இப்போது பாடசாலை வழமைபோல இயங்குகின்றது. புதிய கட்டடம் கட்டுவதற்கு ஆப்கான் அரசும், சில இஸ்லாமிய அமைப்புகளும் நிதியுதவி செய்திருந்தன. அப்படி நிதியுதவி செய்த அமைப்புகளில் ஒன்று, மன்ட்ரவரி கிராமத்தில் இருந்து மிகத் தொலைவில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள இஸ்லாமிய இளைஞர் சங்கம்.

மன்ட்ரவரி கிராமப் பாடசாலையில், நீளமான ஊதா நிற ஆடையும், தலையை மூடிய துப்பட்டாவுமாக இருக்கும் மாணவிகளில் ஒருவர்தான், கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட, 12 வயதான நூரியா. மிக மிருதுவான குரலில் பேசுகிறார் இவர்.

நூரியாவின் லட்சியமே தானும் ஒரு ஆசிரியையாக வரவேண்டும் என்பதே. “அவர்கள் எனது மூக்கையும் காதுகளையும் வெட்டினாலும் பரவாயில்லை. நான் தொடர்ந்தும் பாடசாலைக்கு வருவேன். எனக்கு படிக்கவேண்டும்” என்கிறார்.

இது நூரியாவின் பாடசாலையில் மாத்திரம் நடைபெற்ற ஒன்றல்ல. ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்கள் பாடசாலைகள் எல்லாமே தலைக்கு மேல் கத்தியுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள், வீட்டுக்கு வெளியே வரக்கூடாது, பாடசாலைக்குப் போகக் கூடாது என்ற கோஷத்துடன் தலிபான்களின் ஒரு பிரிவினர் ஒவ்வொரு பெண்கள் பாடசாலையாக இலக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் முன்பு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே, பெண்கள் யாரும் பாடசாலைகளுக்கு போக முடியாது என்ற நடைமுறையைக் கொண்டு வந்தார்கள். ஆனால், யுத்தம் வந்து எல்லாமே மாறிவிட்டது. தலிபான்களின் கட்டுப்பாட்டிலலிருந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டபின், பாடசாலைகளுக்கு பெண்கள் செல்லத் தடையில்லை.

அவ்வளவு காலமும் வெளியுலகமே தெரியாமல் இருளில் இருந்த பெண்கள், படிக்கும் கனவுகளுடன் பாடசாலைகளுக்கு வரத் தொடங்கினார்கள்.

இன்று ஆப்கானின் கல்வி அமைச்சு நாடு, முடுவதிலுமாக 1350 பெண்கள் பாடசாலைகள் இருப்பதாக கூறுகின்றது. அதைத்தவிர மேலும் 2900 பாடசாலைகளில், பெண்கள் மதியத்துக்குப் பின்னர் படிக்க முடியும்.

இதன் காரணம், ஆப்கான் பாடசாலைகளில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் படிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் 2900 ஆண்கள் பாடசாலைகளில், மதிய இடைவேளைவரைதான் ஆண்கள் படிக்கமுடியும். அதன் பின்னர், அவர்கள் வெளியேற, மாலைநேரத்தில் அப்பாடசாலைகள் 100 சதவிகித பெண்கள் பாடசாலைகளாக இயங்கும்.

ஆப்கானை முழுவதிலுமுள்ள 5 மில்லியன் மாணவ மாணவிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் என்கிறது கல்வி அமைச்சு.

பெண்களுக்கான பாடசாலைகள் இயங்காதவாறு செய்வதற்கு, தலிபான்கள் இன்னமும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். பெரிய நகரங்களிலுள்ள பெண்கள் பாடசாலைகளை இவர்கள் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஆனால், மலையோரக் கிராமங்களிலும், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் இவர்களால் அச்சுறுத்த முடிகின்றது.

இதெல்லாம் தேவையில்லை என்கின்றனர் தலிபான்களின் ஒரு பிரிவினர்.

இங்குள்ள மற்றொரு விஷயம், தலிபான் அமைப்பிலும் பல பிரிவுகள் உள்ளன. இதுபோன்ற கடும் கட்டுப்பாட்டுகளை நடைமுறைப் படுத்துபவை சில பிரிவுகள்தான். ஆனால், தலிபானின் ஒரு பிரிவு இப்படிச் செய்வதை, மற்றைய பிரிவுகள் தட்டிக் கேட்பதில்லை. அப்படியொரு அன்டர்ஸ்டான்டிங் அவர்களிடையே உண்டு.

நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பூச்சியமாக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 1.75 மில்லியன் என்ற அளவில் உயர்ந்திருப்பது, தலிபான் சில பிரிவுகளில் உள்ள ஆட்களுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இன்றுகூட, ஆப்கானில் உள்ள மொத்த பெண்கள் ஜனத்தொகையில் 79 சதவிகிதமானவர்கள், தமது வாழ்க்கையில் ஒருபோதும் எழுதவோ படிக்கவோ இல்லை.

தலிபான்களின் தாக்குதல்களால் எந்தவித பலனும் இல்லை என்று கூறிவிட முடியாது. இந்த வருடம் மாத்திரம் சுமார் 300 பெண்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன – பயம் காரணமாகவும், கட்டடங்கள் அழிந்து விட்டதாலும். இப்படி மூடப்படும் பெண்கள் பாடசாலைகள் பெரும்பாலும் இருப்பது, ஆப்கானின் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில்.

அங்கெல்லாம், தலிபான்களின் ஆதிக்கம் இன்னமும் இருக்கின்றது.

நேட்டோ ராணுவம் தலிபான்களை வேட்டையாடும் நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால், அங்கே அவர்களுக்கு மக்களிடம் ஆதரவும் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது! முழுமையாக இல்லாவிட்டாலும், கணிசமான அளவில் இருக்கின்றது.

சரி. பல வருடங்களாக பின்தங்கிய நிலையில் இருந்த ஆப்கான் பிரசைகள், இப்போது புதிய வாழ்க்கைக்குச் சென்ற பின்னரும், ஏன் தலிபான்களை ஆதரிக்கிறார்கள்? தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கே செல்லவேண்டாம் என்று தடுப்பவர்களை ஏன் ஆதரிக்கிறார்கள்?

அவர்களில் சிலருக்கு மத ரீதியான சில ‘தீவிரமான நம்பிக்கைகள் இருப்பதாக தெரிகிறது.

மற்றயவர்கள்?

இப்போது இருக்கும் புதிய ஆப்கான் அரசில் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக தலிபானை ஆதரிக்கிறார்கள்!

காபுல் அரசு பொதுமக்களின் ஆதரவை படிப்படியாக இழந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கே லோக்கல் போலீஸ் திணற வேண்டியிருக்கிறது. இதனால் குற்றங்கள் பெருகுகின்றன.

உதாரணமாக லக்மன் மாகாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே குற்ற விகிதம், மிகமிக அதிகம். பொதுமக்கள் பொலீஸ்மீது அதீத வெறுப்பில் இருக்கிறார்கள்.

“இங்குள்ள பொலீஸ்காரர்கள் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, சும்மா வீட்டுக்கும் பொலீஸ் நிலையத்துக்கும் சென்று வருகிறார்களே தவிர, குற்றவாளிகளைப் பிடிப்பதேயில்லை” என்கிறார் முல்வி சையத் ரஹ்மான். இவர் அந்த மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.

தலைநகர் காபுலில் பெண்கள் உரிமை அமைப்பின் பெண்கள் தைரியமாக வெளியே வந்து போராடுகிறார்கள்.

“இரண்டு வருடங்களுக்கு முன்னர், இங்கே ஒரு தலிபான்காரர்கூட இருக்கவில்லை. பொதுமக்களின் ஆதரவு இல்லாத நிலையில் அவர்கள் அனைவரும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இன்று? பொதுமக்களில் பலர் கொஞ்சம் கொஞ்சமாக தலிபான் ஆதரவாளர்களாக மாறி வருகிறார்கள். என்ன காரணம்? ‘பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டிருக்கும் வெறுப்பு” என்கிறார் ரஹ்மான்.

“அரசாங்கம் எங்களைக் கவனிப்பதில்லை. அவர்களுக்கு நாங்கள் ஒரு பொருட்டாக இல்லை. எங்களைப் பாதுகாப்பதில்லை. அதன் பின்னர், நாங்கள் ஏன் அரசை ஆதரிக்க வேண்டும்?”

இப்படியான மனப்பான்மைதான், ஆப்கானில் மீண்டும் தலிபானுக்கு செல்வாக்கை வளர்த்துக்கொண்டு செல்கிறது.

அமெரிக்கப் படைகள் இன்னமும் ஆப்பானில் நிலைகொண்டிருக்கின்றன. அமெரிக்கர்களின் ஆதரவுடன்தான் ஆப்கானின் அரசு இயங்குகிறது. அப்படியிருந்தும், ஆப்கானில் வாழ்க்கை கடினமாக இருக்கிறது.

இது ஆப்கான் பிரஜைகளை யோசிக்க வைத்திருக்கின்றது.

அமெரிக்கர்கள் உள்ளேவந்தபின், தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். புதிய ஆப்கான் உருவாகிவிடும் என்றெல்லாம் கனவு கண்டவர்கள்கூட, இப்போது தாங்கள் நினைத்தது தவறோ என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம், மிக நீண்ட காலமாக அமெரிக்கர்கள் ஆப்கானுக்குள் இருந்தும், பெரிய மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்கர்களாலும் தாங்கள் நினைத்தபடி பெரிதாக எதுவுமே செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதே அங்குள்ள நிலை.

தலைநகர் காபுல், மற்றும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களையும் தவிர மற்றய பகுதிகளுக்கு செல்வதையே அமெரிக்க ராணுவம் தவிர்க்கின்றது. காரணம் பாதுகாப்பு!

இன்னமும் ஆங்காங்கே நடைபெறும் தாக்குதல்களில் அமெரிக்கப் படையினர் கொல்லப்படுகின்றார்கள். எவ்வளவு முயன்றும், தாக்க வருபவர்களை முழுமையாக நிறுத்தவே முடியவில்லை.

தலிபான்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்..

அதுதவிர, ஆப்கான் மறைவாக நடமாடுவதற்கு அருமையான ஒரு இடம். எவ்வளவு துல்லியமான உளவு பார்க்கும் தொழில் நுட்பம் இருந்தாலும், இன்னமும் அமெரிக்கர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தலிபான்களும் அல்-கய்தா உறுப்பினர்களும் ஆப்கானில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அருகே, பாகிஸ்தான் எல்லை இருக்கிறது.

பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு சார்பாக நடந்துகொள்கிறது என்று (முழுமையாக அல்ல) கூறப்பட்டாலும், பாகிஸ்தான் – ஆப்கான் எல்லைப் பகுதிகளில் தனி ராட்சியமே நடக்கிறது. எல்லைக்கு இந்தப் பக்கமும் சரி, அந்தப் பக்கமும் சரி, அல்-கய்தாவுக்கும் தலிபானுக்கும் இன்றுகூட ஆதரவு அதிகம்.

ஆப்கானில் இன்று, நிஜமான நிலைமை என்ன?

ஒரு புறம் செயற்படாத அரசு. மறுபுறம் அதிகம் நகர முடியாத அமெரிக்கப் படைகள். இந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக தலிபான்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாகின்றது. தலிபான்கள், ஆப்கானின் சில பகுதிகளை கிட்டத்தட்ட தமது ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாகவே மாற்றத் தொடங்குகிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தமது ராணுவத்தை ஆப்கானிலிருந்து திருப்பி அழைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். உடனடியாக நடைபெறாவிட்டாலும், அடுத்த சில வருடங்களில் அமெரிக்கப் படைகள் முழுமையாக அங்கிருந்து அகன்று விடலாம்.

அமெரிக்கப் படைகள் வெளியேறினால், அதன்பின் 1 நிமிடம்கூட ஆப்கான் அரசு தாக்குப் பிடிக்காது. மீண்டும், தலிபான்களின் கையில் அதிகாரம் சென்றுவிடும்.

அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால், நூரியாவைப் போலுள்ள 1.75 மில்லியன் மாணவிகளின் படிப்பு என்னாகும்? படிந்து, ஆசிரியையாக வரவேண்டும் என்ற நூரியாவின் கனவு என்னாகும்?

-காபுல், ஆப்கானிஸ்தானிலிருந்து ஃபரீஸ் சபாஸ்டாவின் குறிப்புகளுடன், ரிஷி

.

No comments: