
ஜெருஸலேம் நகரைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பி இணையத்தில் தேடினால், அந்த நகரின் பெருமை பற்றியும், அதன் அருகில் இருக்கும் ஸியன் மலை, சைப்ரஸ் மரம், வானை பிளந்து நிற்கும் தேவாலயம் ஆகியவற்றை பற்றியும் விலாவாரியாகக் காணலாம். ஆயினும், அந்த நகரம், நரகத்துக்கு அருகாமையில் இருப்பதை அநேகர் கூறுவதில்லை.
நரகத்துக்கு அருகே நகரம்? இதென்ன புதுக்கதை?
ஜெருஸலேம் நகருக்கு அருகில்தான் ஹின்னொம் பள்ளத்தாக்கு உள்ளது. இந்தப் பள்ளத்தாக்குப் பற்றிய ஒரு மத நம்பிக்கையும் உள்ளது.
அதன்படி, இந்த இடம்தான் பாவிகள் இறந்தபின் செல்லவேண்டிய நரகம். யூதர்களின் தொடக்ககால ஹேப்ரூ பைபிளில், ”ஹின்னொம் பள்ளத்தாக்கில்தான் உலகம் அழியப்போகும் நாளின் நரகத்தின் கதவுகள் திறக்கப்படும். பாவிகள் அனைவரும் இந்தப் பள்ளத்தாக்குக்கு உள்ளே இழுக்கப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. (இது ஆன்மீகக் கட்டுரையல்ல)
மத நம்பிக்கையில் இந்த இடத்தை ‘நரகம்’ என்று கூறுவதை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். ஆனால் இந்தப் பள்ளத்தாக்கக்கு அருகிலுள்ள மக்கள் குடியிருப்பு நரகமாக இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக சொர்க்கம் அல்ல.
வானிலிருந்து பார்த்தால் சொர்க்கம்தான்!
விமானத்திலிருந்து கீழே இந்த நகரைப் பார்த்தால் சொர்க்கம் என்று சொல்லும் வகையில்தான் பச்சைப் பசேல் என்று இருக்கும். சற்றே உயரத்தைக் குறைத்தால், பசுமை போர்த்திய பெரிய புல்வெளிகளைக் காணலாம். இன்னமும் கீழே இறங்கி வந்தால், இந்த புல்வெளியில் வெள்ளைக் குதிரைகள் புல்மேய்வதைக் காணலாம். புல்வெளிகளை அண்மித்த குடியிருப்புகளில் பாலஸ்தீனிய அரேபியர்களும், இஸ்ரேலியர்களும் அருகருகில் குடியிருக்கிறார்கள்.
ஒருவரைப்பற்றி ஒருவர் பயத்திலேயே வாழ்கின்றனர்.
ஒவ்வொரு காலையும், இஸ்ரேலியர்களின் தெருவை கடக்கும்போது மட்டும் பாலஸ்தீனிய அரேபியர்களின் நடைகள் வேகமெடுப்பதை நான் கண்கூடாக கண்டுள்ளேன். அங்கு திடீர் திடீரென்று மக்களின் அடையாள அட்டையை சோதிக்கும் இஸ்ரேலிய காவலர்களிடமிருந்து தப்பிக்க, அவர்கள் தெருவில் நடக்கும்போது தலையை உயர்த்தாமல், கீழ்க் கண்ணால் தெருவையே பார்த்தபடி செல்வதையும் கண்டுள்ளேன்.
நிமிர்ந்து பார்த்தால்தானே சோதனைக்காக காவலர் சைகை செய்து அழைப்பார்?
கடமுடா பேரீச்சம்பழ பஸ்!
இஸ்ரேலியர்கள் வசிக்கும் பகுதியைக் கடந்துவிட்டால், ஹெப்ரோன் வீதியை அடையலாம். பாலஸ்தீனிய அரேபியர்கள் இந்த வீதியை அடைந்த பின்னர், அங்கு வரும் பாழடைந்த, ‘அரேபியர்கள் மட்டும் ஏறும்’ பஸ்ஸில் ஏறிச் செல்வதையும் காணலாம். பஸ்கள் கடாமுடா என்று, பேரீச்சம்பழத்துக்கு விற்கும் நிலையில்தான் ஓடிக்கொண்டிருக்கும்.
‘அரேபியர்கள் மட்டும் ஏறும் பஸ்’ என்று பஸ்ஸில் பெயர்ப்பலகை ஏதுமில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த பஸ்களில் நீங்கள் அரேபியர்களைத் தவிர வேறு யாரையும் (முக்கியமாக இஸ்ரேலியர்களை) காணமுடியாது.
இந்த பஸ்கள் செல்லும் அதே இடங்களுக்கு, இஸ்ரேலியர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தும் பஸ்கள் ஓடுகின்றன. அந்த பஸ்கள் அழகாக, புதிதாக இருக்கின்றன. அப்படியிருந்தும் அரேபியர்கள் ஏன் இஸ்ரேலியப் பகுதியைக் கடந்து ஹெப்ரோன் வீதிவரை வந்து கடமுடா பஸ்களில் பயணிக்க வேண்டும்? பேசாமல் இஸ்ரேலியப் பகுதிகளில் ஓடும் புதிய பஸ்களில் சென்றிருக்கலாமே? காரணம் இருக்கிறது.
ஒரு அரேபியர் இஸ்ரேலியப் பகுதியில் பஸ்ஸில் ஏறினால், அவர் பஸ்ஸை வெடிக்கவைக்க வெடிகுண்டுடன் வந்த தற்கொலைப் போராளியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடும்.
அரேபியக் கடைக்கா? வரவே மாட்டோம்!
இதேபோலத்தான் இஸ்ரேலியர்களும், தனக்கு உயிரே போகக்கூடிய தேவை இருந்தாலும், அருகாமையில் இருக்கும் அரேபியக் கடைக்குச் செல்ல மாட்டார்கள். கடந்த வருடம் இங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், மூன்றில் இரண்டு பங்கு இஸ்ரேலியர்கள், அரேபியர்கள் குடியிருக்கும் பகுதியில் குடியிருக்க விரும்பவில்லை.
அதே கருத்துக்கணிப்பில், இதுவே தலைகீழாக, அரேபியர்களின் விருப்பமாகவும் இருந்தது.
பாலஸ்தீனியர்கள் ஜெருஸலேமின் கிழக்குப் பகுதியே தங்களின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்று பல வருடங்களாக கோரி வருகின்றனர். ஆனால், 2000 வருடங்களாக தாங்கள் ஜெருஸலேமைச் சொந்தம் கொண்டாடி வருவதாக யூதர்கள் கூறுகின்றனர். இதனால்தான் 1967ம் ஆண்டு நடைபெற்ற 6 நாள் போரில் ஜெருஸலேமைக் கைப்பற்றியது யூதர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இப்போதும் கணிக்கப்படுகின்றது.
அதற்குப் பிறகு இந்த 45 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், யூதர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றி அறிந்தவர்கள், இதற்கு ஒரு முடிவு நிச்சயம் வேண்டும் என்பதை நிச்சயம் உணர்வார்கள். ரத்தம் சிந்தல் முடிவுக்குவர வேண்டும் என்று விரும்புவார்கள்.
நகரைப் பிரித்துக் கொடுங்கள்

சுவரில் வரையப்பட்டுள்ள பாலஸ்தீனக் கொடியைக் கடந்து செல்லும் இஸ்ரேலியர் (பாடி லங்குவேஜைக் கவனியுங்கள்)
2000ம் ஆண்டு, இந்த இரு நாடுகளுக்குமான சண்டையை முடிக்கும் விதத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், ஜெருஸலேமை இரு பகுதிகளாகப் பிரித்து, கிழக்குப் பகுதியை பாலஸ்தீனியர்களுக்கு விட்டுக் கொடுக்குமாறு இஸ்ரேலிடம் யோசனை தெரிவித்தார்.
இந்தத் திட்டம், ஜெருஸலேம் அழகாக இரண்டாக பிரிக்கப்படும் வகையில் இருந்தது.
ஆனால், இந்த மாநகரம் அப்படிப் பிரிக்கப்பட்டால் அதனால் பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் குழப்பங்கள் ஏற்படும். மேலும், இந்த நகரத்தில் இஸ்ரேலியர்களினதும் அரேபியர்களினதும் பழமையான சிலைகளும் பொருட்களும் வழிபாட்டுத் தலங்களும் நகரம் முழுவதிலும் கலந்துபோய் இருக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரேபிய மற்றும் இஸ்ரேலியப் பார்வையாளர்களை ஜெருஸலேமுக்கு இன்றைக்கும் வரவழைப்பவை அவைதான்.
இஸ்லாமியர்கள் இங்குள்ள அல்-அக்ஸா மசூதியில் பிரார்த்தனை செய்ய விரும்புவர். யூதர்கள் அங்குள்ள மேற்கு சுவரில் பிரார்த்தனை செய்ய விரும்புவார்கள். இந்த நகரத்தில் உள்ள எண்ணற்ற வீதிகளில் ஒவ்வொரு வீதியும் ஒவ்வொரு இனத்தின் அல்லது மதத்தின் நம்பிக்கையால் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
நகரைப் பிரித்தால், இரு எதிரி முகாம்கள்!
நகரம் பிரிக்கப்பட்டால், இஸ்ரேலியர்கள் தமது வழிபாட்டுத் தலங்கள் பிரிக்கப்பட்ட அரேபியப் பகுதியில் இருந்தால் செல்ல முடியாது. அரேபியர்கள் இஸ்ரேலியப் பகுதிகளுக்குச் செல்ல முடியாது. கிட்டத்தட்ட இரு எதிரி முகாம்களாக நகரம் மாறிப்போகும்.
ஜெருஸலேமைச் சேர்ந்த வழக்கறிஞர் டானியல் சீட்மான், “ஜெருஸலேமைப் பிரிப்பது என்பது இயலாத காரியம். அது ஒரு அரசியல் மற்றும் வரலாற்று பொக்கிஷம். இதைப் பிரிக்கப் போனால் நிச்சயம் இதனால் பல பாதிப்புகள் ஏற்படும்” என்கிறார்.
இந்த நகரை மதில்களாலும், கட்டிட இடிப்புகளாலும் இரண்டாக பிரித்துவிட முடியாது. ஏனெனில் இந்த இடம் ஏற்கனவே இஸ்ரேலிய, மற்றும் அரேபிய மனங்களில் பல நூற்றுக்கணக்கான விதங்களாக பிரிந்துள்ளது. ஆயினும், தற்போது இந்த பிரிவை மறந்து மெதுவாக அவர்கள் ஒருவருக்கொருவர் பழக ஆரம்பித்துள்ளனர்.
இறைச்சிக் கடையில் தொங்கும் ஆடு
தற்போது நிலைமை ஓரளவு சுமுகமாகி, மேல்தட்டு அரேபியப் பெண்கள் இஸ்ரேலியக் கடைகளுக்கும், ஒரு பகுதி இஸ்ரேலியர்கள் அரேபியர்களின் பகுதிகளுக்கும் வர ஆரம்பித்துள்ளனர். அனைவருமே, கசாப்பு கடையில் தொங்கும் ஆட்டை பார்க்கும்போது, இறைவனின் படைப்பில் இந்தளவுக்கு பாதிக்கப்படும் உயிரினங்களும் இருக்கின்றனவே என்ற ஒத்த நினைப்பில், தங்களது வேறுபாடுகளை சில கணங்கள் மறக்கின்றனர்.
ஆனால் அந்த நினைப்பு, சிறிது நேரமே நீடிக்கின்றது.
இங்கு இரு இனத்தவருக்குமிடையே இடைவெளி நீண்டகாலமாக இருந்தாலும், எப்போது அது பெரிய இடைவெளியாக மாறியது? 2000ம் ஆண்டுமுதல் 2002ம் ஆண்டுவரை, இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனிய இடங்களை மூட ஆரம்பிக்கத் தொடங்கியபோதே, சரமாரியாக பாலஸ்தீனிய தற்கொலைப் படைகள் உருவாக ஆரம்பித்தன. நகரில் குண்டுவெடிப்புகள் அதிகமாகின. இதனாலேயே அரேபியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்குமிடையே இடைவெளி பெரிதாகியது.
40 வருட சங்கடமான நினைவுகள்
இந்த நகரத்தில் வசிக்கும் அரேபியர்களுக்கு 40 வருட இஸ்ரேலிய ஆட்சி பற்றிய சங்கடமான நினைவுகளே அதிகம். பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்குமிடையே சிக்கி ஜெருசலேமின் கிழக்குப் பகுதி தவித்து வருகிறது. இதை மிகத் தெளிவாக நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள அபுதோர் பகுதியில் காணலாம்.
அபுதோர் பகுதியில் தோட்டங்களில் இருக்கும் காய்ந்து உதிர்ந்த பூக்கள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை நகராட்சி செய்கிறது. நகராட்சி குப்பை அள்ளும் வாகனங்களை ஏற்பாடு செய்து தினமும் குப்பைகளை வாரிச் செல்கிறது. ஆனால், அரேபியர்கள் இருக்கும் பகுதியில் இவை ஏதும் இல்லை. குப்பை அள்ளி செல்ல அரேபியர்கள் தங்கள் பணத்தில் சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
அரேபியப் பகுதிகளில் பார்க்குகள் இல்லாததால், அரேபியர்களின் குழந்தைகள் தெருவிலேயே விளையாடுகின்றன.
“அவர்கள் நாய்க்குட்டியையே திருடுவார்கள்!”
“அரேபியர்களை ஏன் உங்களில் இருந்து தள்ளி வைத்திருக்கிறீர்கள்?” என்று இங்கு வசிக்கும் எனது இஸ்ரேலிய நண்பர்களைக் கேட்டால், அரேபியர்களுக்கு திருடும் பழக்கம் அதிகம் உள்ளது என்கிறார்கள். கார்கள், சைக்கிள்கள், நாய்க்குட்டி என எல்லாவற்றையும் திருடுவார்களாம்.
“அவர்கள் ஏன் திருடுகிறார்கள்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டால், இங்கு வசிக்கும் அரேபியர்களிடம் பணம் இல்லை. ஆனால் இஸ்ரேலியர்களிடம் பறிகொடுக்கும் அளவு பணம் உள்ளது என்கிறார்கள்.
இப்படியான பதில்கள், உண்மையான பிரச்சினையின் ஆழத்தை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. பணம் இருப்பது, பணம் இல்லை என்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல இது.
அவர்களது தெருவில் நடக்கையில்…
அஹமது அபு சாலோம் என்னும் அரேபியர், “நான் இஸ்ரேலியர்களின் தெருவில் நடக்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது. அவர்களது குழந்தைகள் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றனர் ஆனால், என் குழந்தைகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை” என்கிறார் .
சமீபத்தில் அவரது மகனை ஒரு காவல் அதிகாரி வீதியில் மறித்திருக்கிறார். அரேபிய முறையில் தொப்பி அணிந்திருந்த மகனின் தலைத் தொப்பியைக் கழட்டிக் காண்பிக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு அவரது மகன், “நான் ஏன் தொப்பியைக் கழட்ட வேண்டும்? இது ஒரு ஜனநாயக நாடு” என்று எதிர்ப்புத் தெரிவிக்கவே, அதற்காகத் தனது மகனை அந்தக் காவலதிகாரி நன்கு அடித்து விட்டார் என்கிறார் அஹமது அபு சாலோம். இப்படியான சம்பவங்களை வேறு சில அரேபியர்களும் கூறுகின்றனர்.
அரேபியர்கள் இஸ்ரேலிய அதிகாரத்திற்கு கட்டுப்பட மறுப்பதால் சில வினோதமான விளைவுகள் உருவாகி வருகின்றன என்பதை இந்தப் பகுதியில் காணக்கூடியதாகத்தான் இருக்கிறது.
இவர்களின் சண்டையே டெலிபோன் டைரக்டரிவரை!
இஸ்ரேலிய நிர்வாகத்துக்கும், அரேபிய மக்களுக்குமிடையிலான உரசலை ஜெருசலேமின் சில டெலிபோன் டைரக்டரிகளிலும் காணலாம். இவற்றில் சில அரேபியத் தெருக்கள் காலியாகக் காட்டப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்படாத அமேசான் காடுகளைப்போலக் காணப்படுகின்றன.
ஏனெனில், தெருக்களை உருவாக்கி பெயர் சூட்டும்போது எந்த அரேபியரும், இஸ்ரேலியர்களின் ஆதிக்கத்திலுள்ள நகராட்சி சபையிடம் செல்வதில்லை. தெருவுக்குப் பெயர் என்னவென்று பதிவு செய்யப்படாததால் அந்தத் தெருவே காலி என்று தொலைபேசி டைரக்டரிகளிலும் காலியாக விடப்பட்டுள்ளது.
இதைவிட மற்றொரு காரியமும் நடந்திருக்கிறது. கிழக்கு ஜெருஸலேமில் சில தெருக்களின் பெயர்களை, அரேபியர்களை வெறுப்பேற்ற வேண்டுமென்பதற்காகவே, யூதப் போர் வீரர்களின் பெயர்களைத் தாமே சூட்டி, தொலைபேசி டைரக்டரிகளில் அதையே இணைத்து விடுகிறது நகராட்சி சபை.
அதேபோல பெயர் தெரியாத தெருக்களுக்குத் தபால்களும் விநியோகப்படுவதில்லை.
நாங்கள்தான் தீவிரவாதிகளா?
இதனால், இஸ்ரேலில் தங்களது இருப்பு அங்கீகரிக்கப்படவில்லை. தங்களை தீவிரவாதிகளாகவே காண்கின்றனர் என குமுறுகின்றனர் அரேபியர்கள்.
சரி.. இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன அல்லவா? இவற்றில் அரசியல் தீர்வை ஒருபக்கமாக வைத்துக்கொண்டு, அரேபியர்கள் தமது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு கண்டு, அவர்களை ஓரளவுக்காவது மூச்சுவிட வைக்க முடியாதா?

இந்த நகரம் யாருக்குச் சொந்தம்? அரேபியரும் இஸ்ரேலியரும் ஒரேயிடத்திலிருந்து ஜெருசலேம் நகரைப் பார்க்கும் காட்சி
இதை ஓரளவுக்குச் செய்யலாம். அதற்கு அரேபியர்களின் பிரதிநிதிகளும் நகரின் நிர்வாகக் கட்டமைப்புகளில் இருக்க வேண்டும். நகராட்சி சபைகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
தேர்தல்கள் மூலமே இது சாத்தியம். ஆனால், அரேபியர்கள் நகர நிர்வாக சபைகளில் ஏன் ஒருபோதும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை? அவர்களுக்கு வாக்குரிமை இல்லையா? இருக்கின்றது.
அரேபியர்கள் கிழக்கு ஜெருஸலேமில் நடக்கும் தேர்தல்களில் பங்கு பெற்றால் நிச்சயம் அவர்களால் தங்களது பிரதிநிதிகளை நிர்வாக சபைகளுக்கு அனுப்ப முடியும். தமது அன்றாட வாழ்க்கை நிலைமையை ஓரளவுக்காவது மேன்மையாக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. தேர்தல்களில் வாக்களிக்காமல் புறக்கணிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
அவர்களுடன் சகவாசமா? நீ துரோகி!
வெளிநாடுகளில் இருந்து இந்த மக்களை இயக்கும் இவர்களது பாலஸ்தீனத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை துரோகம் என்கிறார்கள். “தேர்தலில் பங்குபெறுவதென்பது, எதிரிகளுடன் (இஸ்ரேலியர்களுடன்) சேருவதைப் போலவாகும். அந்த நினைப்பே உங்களுக்கு வரக்கூடாது” எனக்கூறி அவர்களை தடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment