காபுல், ஆப்கானிஸ்தான்: தலிபான் போராளிகளால் இன்று (செவ்வாய்க்கிழமை) காபுல் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், ஆப்கானிஸ்தான் தலைநகரின் பாதுகாப்பும், அங்குள்ள வெளிநாட்டவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
தலைநகரின் பிரதான பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. வழமைபோல அதற்கு பலத்த பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள வீதி, எந்த நேரமும் ஜனநடமாட்டம் உள்ள பிரதான வீதி. இப்படியான, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கட்டடம்தான் தாக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு காபுல் அமெரிக்க தூதரகம் இருந்த வீதியின் தோற்றம். புகை தெரியும் திசையில் இருந்துதான் தலிபாக்கள் தாக்கத் தொடங்கினர்.
மதியம் 1.15க்கு தாக்குதல் தொடங்கியது. திடீரென ராக்கெட்கள் பறந்து வந்து கட்டடத்தைத் தாக்கின. அதையடுத்து எந்திரத் துப்பாக்கிகளால் தாக்குதல்கள் தொடர்ந்தன. குறைந்த பட்சம் 10 ராக்கெட்கள் வந்து தாக்கியதாகத் தெரியவருகின்றது.
இந்தக் கட்டடம் அமைந்திருந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில், உயரமான கட்டடம் ஒன்று உள்ளது. இன்னமும் கட்டுமான வேலைகள் நடைபெற்றுவரும், பூர்த்தியடையாத கட்டடம் அது.
அதன் வெவ்வேறு தளங்களில் முன்கூட்டியே ஏறி மறைந்திருந்த போராளிகளே, ஒரே சமயத்தில் தாக்குதலை ஆரம்பித்தனர்.
ஆட்கள் யாருமற்ற இந்த உயரமான கட்டடம், தாக்குதல் நடாத்துவதற்கு வசதியானதாக இருந்தது. உயரமான கட்டடமாக இருப்பதால், அங்கிருந்து பார்க்கும்போது, அமெரிக்க தூதரகம் தெளிவாகத் தெரியும் வகையில் உள்ளது. இந்த கட்டடத்துக்குள் தலிபான் போராளிகள் எப்படி ராக்கெட் லாஞ்சர்களுடன் வந்தார்கள், எவ்வளவு நேரமாக மறைந்திருந்தார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை.
தலைநகருக்கு உள்ளே, நகரின் நடுப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள இடத்தில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தற்கொலைப் போராளிகளாக இருக்கவே சாத்தியம் உள்ளது. காரணம், தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்தக் கட்டடம் சுற்றிவளைக்கப்பட்டால், யாரும் தப்பிக்க முடியாது.
1.15க்கு தொடங்கிய தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், 3.10க்கு அமெரிக்க விமானப்படையின் இரு பிளாக்ஹோக் ஹெலிகாப்டர்கள் ஸ்தலத்துக்கு வந்து சேர்ந்தன. அமெரிக்க தூதரக கட்டடத்தின்மேல் பறந்தபடியே சுற்றிய இந்த ஹெலிகாப்டர்கள், தரையை நோக்கி தாக்குதலை நடாத்தவில்லை.
மாலை 4 மணிக்கு கிடைத்த தகவலின்படி, தரையிலிருந்த பாதுகாப்புப் படையினர் சுட்டதில், இரு போராளிகள் கொல்லப்பட்டனர். மூவர் தொடர்ந்தும் எந்திரத் துப்பாக்கிகளால் சுட்டவண்ணம் உள்ளனர். முழுமையான சேத விபரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment