Wednesday, 14 September 2011

ஸ்ரீலங்கா மாணவர்களுக்கு சீன பல்கலைக்கழக அட்மிஷன்!

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யா: அதிக எண்ணிக்கையில் ஸ்ரீலங்கா மாணவர்களுக்கு, சீனாவில் மேற்படிப்பை மேற்கொள்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சீன ஜனாதிபதி ஹூ ஜின்டோ, தெரிவித்துள்ளார். தற்போது, ஸ்ரீலங்காவுக்கு வெளியே அதிகளவில் ஸ்ரீலங்கா மாணவர்கள் உயர்கல்வி பெறுவது இந்தியாவில்தான்!

ரஷ்யா சென்றுள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே, அங்கு விஜயம் செய்திருந்த சீன ஜனாதிபதியுடன், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் பற்றிப் பேசப்பட்டன.

அப்போது, சீன ஜனாதிபதி, “ஸ்ரீலங்கா மாணவர்கள் சீனாவில் தமது மேற்படிப்பை மேற்கொள்ள வரவேற்கப்படுகின்றனர். சீனப் பல்கலைக்கழகங்களில் ஸ்ரீலங்கா மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவது தொடர்பாக இலகுவான நடைமுறைகளை நாம் அறிமுகப்படுத்தவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

University of Geosciences, சீனா.

சீனாவில் உயர் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடம் மிக அதிகமான அளவில் 260,000 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவிலுள்ள 620 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

சீனாவுக்கு கல்வி பயிலவரும் ஸ்ரீலங்கா மாணவர்களை ஊக்குவிக்கும் முறையில், ஸ்காலர்ஷிப் நிதியுதவிகளையும் சீன அரசு செய்துகொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது மேற்படிப்பு படிப்பதற்காக சீனா வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதற்காக, வருடத்துக்கு 800 மில்லியன் யுவான (212 மில்லியன் டாலர்) நிதியை சீனாவின் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சீனாவின் மாநில அரசுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்புக்காக 110 மில்லியன் யுவான் ஒதுக்கியுள்ளன” என்று சீனக் கல்வி அமைச்சின் வெளிநாட்டு உறவுகளுக்கான டைரக்டர் சாங் கியூகுவின் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவுடன், இந்தியாவைவிட நெருங்கிய உறவுகளை வைத்துக்கொள்ள சீனா முயன்று வருவது ஒன்றும் ரகசியமல்ல. அதன் ஒரு அம்சமாகவே, ஸ்ரீலங்கா மாணவர்களை சீன பல்கலைக்கழகங்களில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள சீனா முன்வந்துள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா மாணவர்கள் பலர், இந்தியாவில் மேற்படிப்பை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு கல்வி விசா வழங்கும் நடைமுறையை இந்திய அரசு, கடந்தவருடம் கடுமையாக்கியுள்ளது.

http://eravursyf.blogspot.com/

No comments: