• புதிதாகச் சொத்து வாங்குபவர்களுக்கும் ரெசிடென்ஸ் விசா வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது.
துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: புதிய ரெசிடென்ஸ் விசா (residence visa) ஒன்றை அறிமுகம் செய்வது பற்றி ஆராய்ந்து வருகின்றது துபாய். அங்கு சொத்துக்கள் அல்லது வியாபாரத்தை வைத்திருப்பவர்கள் நீண்டகாலம் தங்குவதற்கான ரெசிடென்ஸ் விசா பற்றியே ஆராயப்படுகின்றது என அராபிக் பத்திரிகையான அல்-பயன், நேற்று(திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.
இந்த விசா பற்றிய விதிமுறைகள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறிது காலத்துக்குமுன் துபாயில் ஏற்பட்ட பொருளாதாரத் தள்ளாட்டத்தின்பின், வர்த்தகச் சொத்துக்கள் கைமாறுவது முன்புபோல இல்லை. குடியிருப்பு தொடர்பான சொத்துக்கள் (வீடுகள்) வாங்குவதும் விற்பதும்தான், துபாயின் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை இன்னமும் காப்பாற்றி வருகின்றது.
இதையடுத்தே, குடியிருப்பு தொடர்பான சொத்துக்களை ஏற்கனவே துபாயில் வைத்திருப்பவர்களுக்கும், புதிதாகச் சொத்து வாங்குபவர்களுக்கும் ரெசிடென்ஸ் விசா வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது.
அப்படியொரு திட்டம் கொண்டுவரப்பட்டால், துபாயில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பெரிய எழுச்சியைச் சந்திக்கும் எனவும் ஊகிக்கப்படுகின்றது.
அரசியல் கொந்தளிப்புகள் ஏதுமில்லாத மத்திய கிழக்கு நாடொன்றில் ரெசிடென்ஸ் விசா பெறுவதற்காகவே, துபாயில் வீடுகளை வாங்க பலரும் முன்வரலாம் என்பது உண்மைதான். ஆனால், திட்டம் அமுலுக்கு வந்தபின் வீட்டுவிலைகள் உச்சத்துக்கு எகிறிவிடும் என்பது அதைவிடப் பெரிய உண்மை!
வாங்குவதானால், அதற்குமுன் வாங்க வேண்டும்!
No comments:
Post a Comment