வாஷிங்டன், அமெரிக்கா: புலனாய்வுகள் அமெரிக்காவில் கொஞ்சம் மொதுவாகத்தான் நடைபெற்றாலும், விஷயங்கள் வெளிவருகின்றன. அமெரிக்காவில் நடைபெறவிருந்த விமானத் தகர்ப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் இருந்த கைரேகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு கிருத்துமஸ் தினத்தன்று, டிட்ராய்ட் விமான நிலையத்தில் விமானம் இறங்குமுன் அதை வெடிக்க வைக்கும் திட்டம் ஒன்று தடுக்கப்பட்டிருந்தது. விமானத்துக்குள் வெடிகுண்டை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். நைஜீரியப் பிரஜையான அவர், இந்த வெடிகுண்டைத் தமது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தார்!
அமெரிக்க உளவுத்துறை FBI இந்த வெடிகுண்டைப் பரான்சிக் சோதனைகளுக்காக அனுப்பி வைத்திருந்தது. வெடிகுண்டில் இரு வெவ்வேறு கைரேகைகள் காணப்பட்டன. அதில் ஒன்று, வெடிகுண்டுடன் பயணம் செய்த நைஜீரியப் பிரஜையுடையது. இரண்டாவது நபரின் கைரேகைகள், அமெரிக்க டேட்டாபேசில் இருந்த யாருடைய கைரேகைகளுடனும் பொருந்தவில்லை.
தற்போது, இந்த இரண்டாவது கைரேகைகள் யாருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
கைரேகைகள் அடையாளம் காணப்பட்டதுடன், விமான வெடிப்புத் திட்டமிடலுக்கும் அல்-காய்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. காரணம், அல்-காய்தாவின் வெடிகுண்டுத் தயாரிப்பு நிபுணராகக் கருதப்படும் காலிட் இப்ராஹிம் அல்-அசாரியின் கைரேகைகள் அவை!
இந்த அல்-அசாரியை அமெரிக்க அரசு தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது. அவருடன் வியாபாரத் தொடர்புகளை வைத்துக் கொள்வது அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் எண்ணைக் கிடங்குகளை வெடிவைக்கும் திட்டம் ஒன்றிலும் அல்-அசாரி தொடர்புடையவர் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இவர் சவுதி அரேபிய அரசாலும் தேடப்படும் நபராக இருக்கிறார். அத்துடன் இன்டர்போலினால் இவரது பெயரில் ஆரஞ்சு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment